ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்
ADDED : மார் 24, 2026 11:00 PM
கடலுார்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள கிடங்கிலிருந்து தொகுதி வாரியாக பிரித்தனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகின்றன.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 20 சதவீதம் இருப்புடன், வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி 30 சதவீதம் இருப்புடனும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்திலுள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள 2590 ஓட்டுச்சாவடி மையங்களுக்குத் தேவையான 3108 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3108 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3367 ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த சட்டசபை தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு பிரித்தனுப்பும் பணி இன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
