ADDED : பிப் 01, 2026 06:50 AM

கடலுார்: கடலுாரில், தலையில் கல்லை போட்டு கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் சோனஞ்சாவடியை சேர்ந்தவர் குமார் (எ) பூமிநாதன்,50; மீன்பிடி தொழிலாளி. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற பூமிநாதன் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், நேற்று காலை அவர் வேலை பார்த்து வந்த ஹோட்டல் அருகே தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அருகில் ரத்தக்கறை படிந்த கல் கிடந்தது. தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.'
அப்போது, தலையில் கல்லைபோட்டு பூமிநாதன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
விசாரணையில், பூமிநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததும், அதனால் வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதும் தெரிந்தது. வேறு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கடலுாரில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
