ADDED : ஏப் 14, 2026 07:18 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே காடை கிரேவி சரியில்லை என கூறி, பெண் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த நேமம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சுமதி, 48. இவர் கருவேப்பிலங்குறிச்சியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மதகளிர்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல், 24. என்பவர், ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று சுமதி ஹோட்டலில் காடை கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிட்டார். அப்போது, கிரேவி தரமாக இல்லை என கூறி சுமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், சுமதியை அங்கிருந்த சில்வர் பிளேட்டால் தாக்கினார். இதில், படுகாயமடைந்த சுமதி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, சக்திவேலை கைது செய்தனர்.
