ADDED : ஜன 24, 2025 01:16 AM
பாப்பாரப்பட்டி, :தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், தமிழக அரசு விதைப்பண்ணை மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நெல், ராகி, சாமை, கொள்ளு, உளுந்து, பனிவரகு, உள்ளிட்ட விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நெல், ராகி, சாமை உள்ளிட்ட விதைகள் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இது குறித்து, பாப்பாரப்பட்டி விதை சுத்திகரிப்பு வேளாண் அலுவலர் தேவிகா கூறியதாவது:பாப்பாரப்பட்டியில், தமிழக அரசு விதைப்பண்ணை மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விதை பண்ணைக்கு சொந்தமான, 13.5 ஏக்கர் நிலத்தில், 8 ஏக்கர் நிலத்தில் நெல், ராகி, சாமை, கொள்ளு, உளுந்து, ஆத்துார் கிச்சடி சம்பா, பனிவரகு உள்ளிட்டவை கடந்தாண்டு சாகுபடி செய்யப்பட்டது. இதை, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து வேளாண் விற்பனை கூடங்கள் மூலம், விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த பின், அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் விதைகள், மீண்டும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இதில், கடந்தாண்டு, நெல், 150 டன், ராகி, 100 டன், சாமை, 100 டன் என, 350 டன் அளவிற்கு தானியங்களை சுத்திகரிப்பு செய்து, விவசாயிகளுக்கு வழங்க தரச்சான்று அட்டை பொறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
