/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இன்றுடன் மேட்டூர் அணைக்கு 90 வயது நிறைவு
/
இன்றுடன் மேட்டூர் அணைக்கு 90 வயது நிறைவு
ADDED : ஆக 21, 2024 01:24 AM
இன்றுடன் மேட்டூர் அணைக்கு 90 வயது நிறைவு
மேட்டூர், இன்றுடன் மேட்டூர் அணைக்கு, 90 வயது நிறைவு பெறுகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகாவின் குடகு மாவட்டம் தலைகாவிரியில் உருவாகும் காவிரியாறு, 20க்கும் மேற்பட்ட துணையாறுகளுடன் கலந்து அகன்ற காவிரியாக உருவாகி கர்நாடகா, தமிழகத்தில், 748 கி.மீ., பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு டெல்டா மாவட்ட கிராமங்களில் நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன. அதை தடுக்க காவிரி குறுக்கே அணை கட்ட அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. தொடர்ந்து அதற்கான ஆய்வு, 1834 முதல், 1924 வரை, 90 ஆண்டுகள் நடந்தது. இறுதியாக அணை கட்ட, மேட்டூர் தேர்வு செய்யப்பட்டு, 1925 ஜூலை, 20ல் கட்டுமானப்பணி தொடங்கியது.
கண்காணிப்பு, வடிவமைப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ், நிர்வாக பொறியாளர் வெங்கட்ராம ஐயர், முதன்மை தலைமை பொறியாளர் முல்லிங்க்ஸ் அடங்கிய, 24 பொறியாளர் குழுவினருடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள், கட்டுமானப்பணியில் ஈடுபட்டனர். 1934 ஜூலை, 14ல் கடைசி கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து முதல்முறை பாசனத்துக்கு, அதே ஆண்டு ஜூன், 12ல் நீர் திறக்கப்பட்டது. பின், 1934 ஆக., 21ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு, 4.80 கோடி ரூபாய் செலவானது.
சென்னை மாகாண கவர்னர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி, 1934 ஆக., 21ல் பாசனத்துக்கு நீரை திறந்து வைத்து அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அவரது நினைவாக, அணைக்கு ஸ்டான்லி அணை என பெயர் சூட்டப்பட்டது. அணை கட்டுமான பணி முடிந்த நிலையில் இதுவரை, 1947, 1999, 2015 என, 3 ஆண்டுகள் கட்டட மேற்பகுதியில் மின்னல் தாக்கியுள்ளது. எனினும் சேதம் ஏற்படவில்லை.
அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன், 12 முதல் ஜன., 28 வரை பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், 13 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். நடப்பாண்டு கடந்த, 30ல் மேட்டூர் அணை, 43ம் முறை நிரம்பியது. தற்போது நீர்மட்டம், 120 அடியில் நீடிக்கிறது. அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து, இன்றுடன், 90 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் மேட்டூர் அணை, நாளை, 91ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

