/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
20 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
/
20 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
ADDED : மே 28, 2024 08:55 AM
அரூர்: அரூர் அருகே நாமக்கல்லுக்கு லாரியில் கடத்தப்பட்ட, 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சின்னாங்குப்பத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு அங்கு சென்றனர். அப்போது சின்னாங்குப்பம் மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த, அசோக் லேலண்ட் லாரியில் சோதனை மேற்கொண்டதில், 60 கிலோ எடையில், 329 மூடைகளில், 19,740 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரி உரிமையாளர் மற்றும் டிரைவருமான சேலம் மாவட்டம், ஒமலுார் அருகே குதிரைகுத்திப்பள்ளம் முருகேசன், 38, சின்னாங்குப்பம் ரகு, 34, அதியமான்கோட்டை மாடன் ரைஸ்மில் உரிமையாளர் செல்வராஜ், 45, ஆகிய, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரேஷன் அரிசியை நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிந்தது.
மேலும், இதில் தொடர்புடைய மொரப்பூரை சேர்ந்த பிரகாஷ், தர்மபுரி விஜி, துரை மற்றும் அடையாளம் தெரியாத நபர் உள்ளிட்ட, 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தர்மபுரியிலுள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.