/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பா.ம.க., போராட்டம்; ஜி.கே.மணி
/
காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பா.ம.க., போராட்டம்; ஜி.கே.மணி
காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பா.ம.க., போராட்டம்; ஜி.கே.மணி
காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பா.ம.க., போராட்டம்; ஜி.கே.மணி
ADDED : ஆக 07, 2024 01:36 AM
தர்மபுரி, ''ஒகேனக்கல், காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்,'' என, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., கூறினார்.
தர்மபுரியில், மாவட்ட ஒருங்கிணைந்த தமிழ்நாடு உழவர் பேரியக்க ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பொப்பிடி முருகேசன் தலைமை வகித்தார். உழவர் பேரியக்க, தர்மபுரி மாவட்ட தலைவர்கள் ஐயப்பன், ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
இதில், பங்கேற்ற, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரியாற்றில் கடந்த சில நாட்களாக வந்த, 60 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இதில், 3 டி.எம்.சி., உபரி நீரை, தர்மபுரி மாவட்டத்திற்கு வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு காவிரி நீர் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்தி, ஒரு வலுவான காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும். மேலும், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவில் கடந்த, 1961 ல் காமராஜர் ஆட்சியில் ஆய்வு செய்து, அடிக்கல் நாட்டிய ராசி மணல் அணைக்கட்டு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தின் மூலம், 75 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம், தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், வேலுார், திருப்பத்துார், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதி மக்களுக்கு, குடிநீர் கிடைக்கும். காவிரி உபரிநீர் திட்டம் மற்றும் ராசி மணல் அணைக்கட்டு திட்டத்தின் மூலம், 1,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எனவே, காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பா.ம.க., சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.