/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வறட்சி மாவட்டமாக தர்மபுரியை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
வறட்சி மாவட்டமாக தர்மபுரியை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வறட்சி மாவட்டமாக தர்மபுரியை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வறட்சி மாவட்டமாக தர்மபுரியை அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மே 05, 2024 03:28 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள், வாழைத்தார்களுடன் காய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெயரளவுக்கு மட்டுமே பெய்தது. நீர் நிலைகள் அனைத்தும் வறண்டதால், நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் விளைவித்த தென்னை, வாழை, நிலக்கடலை, பப்பாளி, தக்காளி, பீர்க்கங்காய் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகத் தொடங்கியது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர்.
இது குறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், மூக்கனுார், அக்கமனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட தாதம்பட்டி, நடுப்பட்டி, ஒடசல்பட்டி, பனந்தோப்பு, வைரவல்லி உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளோம். வாழை கன்றுகளை ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து ஒரு கன்று, 15 ரூபாய் என ஏக்கருக்கு, 1,200 கன்றுகள் வாங்கி நடவு செய்தோம். ஒன்பது மாதங்கள் முடிந்து, இன்னும் சில நாட்களில் வாழைத்தார்கள் அறுவடை செய்யவுள்ள சமயத்தில், தண்ணீர் இன்றி அனைத்து வாழை மரங்களும் வாழைத்தார்களுடன் சாய்ந்து கருகியது.
ஒரு ஏக்கருக்கு, 7 லட்சம் செலவு செய்தால் மூன்று லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால் கடுமையான கோடை வெயில் தாக்கத்தால், தண்ணீர் இன்றி அனைத்தும் சாய்ந்ததால் முழுமையாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில், சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சியும் பலன் தரவில்லை. தமிழக அரசு காவிரி உபரிநீர் திட்டம், தென்பெண்ணை ஆறு உபரி நீர் திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி இருந்தால், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் குறையாமல் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, தண்ணீர் கிடைத்திருக்கும். எனவே, தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவித்து, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.