ADDED : செப் 01, 2024 05:02 AM
தர்மபுரி: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க, 8வது மாவட்ட பேரவை கூட்டம், தர்மபுரி அதியமான் அரசு மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் துவக்கி வைத்து பேசினார்.
இதில், அங்கன்வாடி, ஊர்புற நுாலகர், வருவாய் கிராம ஊழியர், பஞ்., செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய்- வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிம், 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசை போல், 20 ஆண்டுகள் பணி முடித்த-வர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப நல பாதுகாப்பு நிதியை, 3 லட்சம் ரூபாய் என உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்கள் ஈமச்சடங்கு மேற்கொள்ள, 25,000 ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட இணைசெயலாளர் சின்-னராஜ் நன்றி கூறினார்.