/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கலில் நீர் வரத்து இல்லை பாறைகளாக காட்சியளிக்கும் அருவிகள்
/
ஒகேனக்கலில் நீர் வரத்து இல்லை பாறைகளாக காட்சியளிக்கும் அருவிகள்
ஒகேனக்கலில் நீர் வரத்து இல்லை பாறைகளாக காட்சியளிக்கும் அருவிகள்
ஒகேனக்கலில் நீர் வரத்து இல்லை பாறைகளாக காட்சியளிக்கும் அருவிகள்
ADDED : மே 03, 2024 02:08 AM

ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், அங்குள்ள ஐவர் பாணி, அதன் கிளை அருவிகள் முற்றிலுமாக வறண்டு, பாறைகளாக காட்சியளிக்கிறது.
கர்நாடகா மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரியாறு, தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்து, அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும்.
இதனால், ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இவர்கள், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டு செல்வதும் வழக்கம்.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவுவதாலும், கர்நாடக அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 200 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.
கடந்த, 2 மாதமாகவே நீர்வரத்து வினாடிக்கு, 100 கன அடிக்கு குறைவாகவும், சற்றே அதிகரிப்பதுமாக உள்ளது.
இதனால், அங்குள்ள ஐவர்பாணி, அதன் கிளை ஆறுகள், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள், நீரின்றி, முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது.
இதனால், ஒகேனக்கல் காவிரியாறு ஆங்காங்கே குட்டைப்போல் காட்சி அளிக்கிறது. மெயின் அருவியில் தண்ணீர் கொட்டும் வகையில், ஆற்றில் மணல் மூட்டைகளை அடுக்கி, திருப்பி விட்டுள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீர் திறக்கவில்லை என்றால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து, பாறைகளாக காட்சி அளிக்கும்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட மக்களின் குடிநீர் தேவை சமாளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து சரிந்தால், குடிக்கவே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.
தற்போது பெரும்பாலான பகுதிகளில், சீராக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சுற்றுலா தலத்தை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மிகுந்த கவலையில் உள்ளனர்.
கடந்த, 2017ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு, ஒகேனக்கல் காவிரியாறு வறண்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நடப்பு ஆண்டு அதே நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகி உள்ளது.