ADDED : மே 26, 2024 07:42 AM
நல்லம்பள்ளி : தர்மபுரி அருகே, சேதமான நிலையிலுள்ள சாலையை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சேசஷம்பட்டி பிரிவு சாலையிலிருந்து, வைரக்கவுண்டன் புதுார், குரும்பட்டி, தண்டுகாரண்பட்டி, பாலஜங்கமனஹள்ளி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை, தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, நல்லம்பள்ளி டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், இவ்வழியாக பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள், காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இவர்களின் நலன்கருதி சேதமான நிலையிலுள்ள இச்சாலையை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.