/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா
/
ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா
ADDED : ஆக 04, 2025 08:34 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடக்கும். நேற்று, ஆடிப்பெருக்கு என்பதால், அதிகாலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வந்த சுவாமி சிலைகள், பூஜை பொருட்களை புனித நீராட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பக்தர்கள் தலையில் அருகம்புல் மற்றும் ரூபாய் நாணயங்களை வைத்து காவிரியாற்றில் புனித நீராடினர். புதுமண தம்பதிகள், பெரியோர்கள், வெற்றிலையில் கற்பூர தீபாராதனை காட்டி, ஆற்றில் விட்டு சென்றனர். மேலும், அங்குள்ள தேசநாதீஸ்வரர் மற்றும் காவிரியம்மனை வழிபட்டு சென்றனர். நேற்று வார விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின்பால்ஸில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
* அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணையாற்றின் கரையோரம் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 25,000க்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்தனர். ஆற்றிலுள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்தனர். பின், ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து, தங்களது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறினர்.
குடிநீர் வசதியின்றி, சமைக்க, குடிக்க பொதுமக்கள் நீரை விலை கொடுத்து வாங்கினர்.பக்தர்களின் கூட்டத்தால், டி.ஆண்டியூர்-அம்மாபேட்டை சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அரூர் கிளையில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியன், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மொரப்பூர் அடுத்த கர்த்தாங்குளத்தில், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள், அங்குள்ள குளத்தில் புனித நீராடிய பின், விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட சுவாமிகளை வழிபட்டனர். அதே போல், தீர்த்தமலை மற்றும் இருமத்துார் தென்பெண்ணையாற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.