/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடகு நகைகளை திருப்பி தராததால் வேளாண் கூட்டுறவு சங்கம் முற்றுகை
/
அடகு நகைகளை திருப்பி தராததால் வேளாண் கூட்டுறவு சங்கம் முற்றுகை
அடகு நகைகளை திருப்பி தராததால் வேளாண் கூட்டுறவு சங்கம் முற்றுகை
அடகு நகைகளை திருப்பி தராததால் வேளாண் கூட்டுறவு சங்கம் முற்றுகை
ADDED : ஏப் 16, 2025 01:09 AM

காரிமங்கலம்:தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் செய்த, 135 சவரன் நகைகளை, 10 ஆண்டுகளாக திருப்பி தராததால், சங்க அலுவலகத்தை உறுப்பினர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பூமாண்டஹள்ளி பஞ்., மோதுார் கூட்டுறவு கடன் சங்கத்தில், ராமியம்பட்டி, மோதுார் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த, 3,300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில், 2012 -- 2014 வரை, நகை அடகு வைத்தவர்கள், 2014 இறுதியில் வட்டியுடன் பணத்தை செலுத்தி மீட்க முயன்றபோது, 'நகை கடன்கள், அரசால் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. சில மாதங்கள் காத்திருங்கள்' என, கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், 2015 தொடக்கத்தில் நகையை கேட்டபோது, கூட்டுறவு சங்கத்தில் நகை இல்லாதது தெரியவந்தது.
புகார் படி, கூட்டுறவு சங்க நகை மதிப்பீட்டாளர் பூதாளன், 55, செயலர் சகாதேவன், 50, ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இருவரிடமிருந்தும் பணம் மற்றும் நிலத்தை ஜப்தி செய்து, கூட்டுறவு சங்கத்திற்கான இழப்பீட்டு தொகை பெறப்பட்டது. ஆனால், நகை அடகு வைத்த, 35 உறுப்பினர்களின், 135 சவரன் நகையை திருப்பி தராமல், 10 ஆண்டுகளாக அதிகாரிகள் இழுத்தடித்தனர்.
புதிதாக வரும் கூட்டுறவு சங்க பதிவாளர்கள், விசாரணை மட்டும் நடத்தியதால், உறுப்பினர்கள் ஆத்திரமடைந்தனர். நேற்று அவர்கள், கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் விஷ்ணுபிரியா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், நகையை அடகு வைத்தவர்கள் கலைந்தனர்.

