/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பலத்த சூறாவளி காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்
/
பலத்த சூறாவளி காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்
ADDED : மே 04, 2024 07:14 AM
இண்டூர் : தர்மபுரி மாவட்டத்தில், வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலுக்கிடையே நேற்று முன்தினம் இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழை பெய்ததில், இண்டூர் அருகேவுள்ள மூக்கனஹள்ளி சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த, வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஓராண்டாக கடும் வறட்சியிலும், தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி, காப்பாற்றி வைத்திருந்த வாழை மரங்கள் நேற்று முன்தினம் திடீரென வீசிய சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்காமல், தோட்டம் முழுதிலுமிருந்த 5,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து விட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட இராமியம்பட்டி, தாதனுார், தாதனுார் புதூர் பகுதியில் இடி மின்னல், பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதே போன்று, பொம்மிடி, சுரக்காப்பட்டி, ரேகடஹள்ளி, திப்பிரெட்டிஹள்ளி, வத்தல்மலை அடிவார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றுக்கு மரங்கள் உடைந்து மின் கம்பங்கள் மீது விழுந்து மின் கம்பங்கள் உடைந்து உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று மாடுகள் சாவு
* அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று மதியம், 3:15 முதல், 4:30 மணி வரை, சூறைக்காற்றுடன் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. சூறைக்காற்றில் கீரைப்பட்டியை சேர்ந்த சிவமணி என்பவரது கொட்டகையின் மேற்கூரையின் மீது, தென்னை மரம் விழுந்ததில், உள்ளே கட்டப்பட்டிருந்த கறவை மாடு உயிரிழந்தது. அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மீது, புங்கை மரம் விழுந்ததில் மாடு பலியானது. கெளாப்பாறையை சேர்ந்த திருவேங்கடம் என்பவரது கறவை மாடு மீது, முருங்கை மரம் விழுந்ததில் மாடு உயிரிழந்தது.
அரூர்-சித்தேரி சாலையில் கீரைப்பட்டியில், 15க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. அரூர்-திருவண்ணாமலை சாலையில் சங்கிலிவாடியில் புளியமரம் சாய்ந்தது. சாலையில் விழுந்த மரங்களை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றும் பணியில் பொதுப்பணித்
துறையினர் ஈடுபட்டனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், வழக்கத்துக்கு மாறாக சுட்டெரித்த வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென இடி மின்னலுடன் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிகளில் லேசான மழை பெய்து சூட்டை தணித்தது. பொம்மிடி, கடத்துார், புளியம்பட்டி, தாளநத்தம், வேப்பிலைபட்டி, இராமியம்படி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.