ADDED : மே 08, 2026 07:20 AM
அரூர்: தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் மற்றும் ஸ்ட்ராக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தர்மபுரி மாவட்டம், அரூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரூர் நகரில் மளிகை, டிபார்மென்ட், காய்கறி, ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி மற்றும் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல், ஓட்டல், டீக்கடை, பலகார கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகளில், தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. மேலும், பிளாஸ்டிக் பைகளில், உணவு மற்றும் டீ பார்சல் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் பெயரளவில் மட்டும் ஆய்வு செய்யாமல், முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
