ADDED : ஆக 04, 2025 08:35 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், ஒடசல்பட்டி அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், 28ம் ஆண்டு ஆடிப்பெருக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், சுவாமி மற்றும் தேர் உலா நடந்தது. அப்போது கங்கணம் கட்டி விரதமிருந்த பக்தர்கள் கரகம், தீச்சட்டி எடுத்தும், பத்ரகாளி போல் வேடமிட்டும் வந்தனர். இதில் கருப்பசாமி வேடமணிந்த பக்தர், கத்தியின் மேல் நின்று ஊர்வலமாக வந்தார்.
மேலும் பக்தர்களின் பிணிகள் நீங்கும் என்ற ஐதீகத்தின்படி, சாலையில் படுத்திருந்த பக்தர்கள் மீது, பத்ரகாளியம்மன் வேடமணிந்தவர் நடந்து வந்தார். தொடர்ந்து பத்ரகாளியம்மன், கருப்பசாமி, சேவலை கடித்தவாறு முதலில் தீ மிதித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தங்களது பிணி நீங்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாட்டையடி வாங்கினர். திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.