/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சின்னாற்றில் தடுப்பணை: விவசாயிகள் கோரிக்கை
/
சின்னாற்றில் தடுப்பணை: விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 06, 2024 07:55 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் சின்னாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை காலங்களில் வரும் மழைநீரை சேமிக்க, தடுப்பணைகள் இல்லாததால், காவிரியாற்றில் கலந்து, வீணாக கடலுக்கு செல்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெட்டமுகிலாலம், நாமகிரி மற்றும் பெருங்காடு, சாஸ்திரமுட்லு உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளிலிருந்து அதிகளவில் வரும் மழைநீர், உப்புபள்ளம் ஆற்றின் வழியாகவும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து வெளியேறும் நீர் சின்னாற்றிலும் கலக்கிறது. இதை நம்பி அப்பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, நெல், காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர். வறட்சி காலத்தில், விவசாயத்துக்கு தேவையான நீரின்றி, சிரமம் அடைந்து வருகின்றனர். இதில், சின்னாற்று செல்லும், 55 கி.மீ.,ல் ஒரு தடுப்பணை கூட இல்லை. இதனால், மழை காலத்தில், தொல்லேகாது பகுதியிலிருந்து வரும் நீரும், சின்னாற்று வழியாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் கலக்கிறது.
இந்நிலையில், மழைநீரை சேமிக்கும் வகையில், சின்னாற்றிலிருந்து செங்கன் பஷ்வந்தாலவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர, விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, சின்னாற்றில் ஆங்காங்கே தடுப்பணை கட்ட, கோரிக்கை விடுக்கின்றனர்.