/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வர் ஸ்டாலின் இன்று ரோட் ஷோவில் பங்கேற்பு
/
முதல்வர் ஸ்டாலின் இன்று ரோட் ஷோவில் பங்கேற்பு
ADDED : ஆக 16, 2025 01:40 AM
தர்மபுரி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக, இன்று மாலை தர்மபுரி வரும், தமிழக முதல்வர் ஸ்டாலின், நல்லம்பள்ளி, ஒட்டபட்டியில், தர்மபுரி ஆகிய இடங்களில் ரோட் ஷோவில் பங்கேற்கவுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், தடங்கத்தில் நாளை நடக்கும் அரசின் நலத்திட்டங்கள் உதவிகள் வழங்குதல் மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க, இன்று மாலை சேலத்தில் இருந்து, தர்மபுரி வருகிறார்.
தர்மபுரிக்கு வரும் வழியில், மாவட்ட எல்லையான தொப்பூர், பாளையம் சுங்கசாவடி உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். நல்லம்பள்ளி, ஒட்டபட்டி, தர்மபுரி ஆகிய இடங்களில் ரோட் ஷோவில் பங்கேற்கிறார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேவுள்ள பயணியர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை, 10:00 மணிக்கு அதியமான்கோட்டை மற்றும் தடங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதில், 512.52 கோடி ரூபாய் மதிப்பில், 1,044 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 362.77 கோடி ரூபாய் மதிப்பில், 1,073 முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளார். மேலும், 830.06 கோடி ரூபாய் மதிப்பில், 70,427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என, 1,705.35 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்க உள்ளார்.
பாதுகாப்பு
முதல்வரின் நிகழ்ச்சிக்காக, தனிப்பிரிவு ஏ.டி.ஜி.பி., சஞ்சய்குமார் தலைமையில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி., (பொ) அணில் குமார் கிரி, தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் உட்பட, 6 ஏ.டி.எஸ்.பி., 16 டி.எஸ்.பி., 4வது பட்டாலியனை சேர்ந்த ஒரு கமான்டர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என, 1,606 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று இரவு, 7:00 மணிக்கு நடக்கும் ரோட் ஷோ மற்றும் நாளை காலை ஒட்டப்பட்டி அருகே ஒவ்வை வழி, அதியமான்கோட்டை, மற்றும் தடங்கம் உள்ளிட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.