/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சந்தையில் சாமந்தி பூ விலையில் சரிவு
/
சந்தையில் சாமந்தி பூ விலையில் சரிவு
ADDED : ஜன 25, 2024 10:03 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதில் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, சாமிசெட்டிபட்டி, ஜருகு, பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளில், பலரக சாமந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
தர்மபுரியிலிருந்து, சாமந்தி, அரளி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்டவை தினமும், 10 டன் அளவிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சென்னை மற்றும் பெங்களூரு பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவு பூக்கள் வருவதால், வெளியூர் வியாபாரிகளின் வரத்து தர்மபுரி பூ மார்க்கெட்டிற்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, கடந்த வாரம் கிலோ, 80 முதல், 120 ரூபாய் வரை விற்ற மஞ்சள் சாமந்தி, நேற்று கிலோ, 20- ரூபாய்க்கு விற்றது. இதனால், மலர் சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
தை மாதத்தில், அதிகளவு பண்டிகைகள் மற்றும் கோவில் திருவிழாக்கள், சுபமுகூர்த்த தின சீசனையொட்டி மஞ்சள் சாமந்தி சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தற்போது சாமந்தி பூ கிலோ, 20 ரூபாய்க்கு விற்கிறது. அதையும் வாங்க வியாபாரிகள் இல்லை. தை மாதத்தில், வழக்கமாக அதிக விலை கிடைக்கும் என்ற நிலை மாறி, தற்போதைய விலை, உற்பத்தி செலவில் நான்கில் ஒரு பங்குக்கு கூட வரவில்லை. இதனால், சில விவசாயிகள் சாமந்தி பூவை அறுவடை செய்யாமலேயே விட்டுள்ளனர். தை மாதத்தில் கோவில் திருவிழாக்கள், சுபமுகூர்த்த தினம், தைப்பூச விழாவையொட்டி, விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு, ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.