/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய நிழற் கூடம் இடிப்பு: நடவடிக்கை கோரி மறியல்
/
புதிய நிழற் கூடம் இடிப்பு: நடவடிக்கை கோரி மறியல்
ADDED : மே 04, 2024 07:14 AM
பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துார் ஒன்றியம், கேத்தி ரெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள வேப்பிலைப்பட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்கூடம் கட்டப்பட்டிருந்தது.
அது பழுதானதால், அதை இடித்து விட்டு, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தர்மபுரி தி.மு.க.,----எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நிழற்கூடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியபோது, அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சொந்தமானவர்கள், தங்களது நிலத்தில் நிழற்கூடம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து வருவாய் துறையினர் அவ்விடத்தை அளந்து காட்டினர். பின் நிழற்கூடம் கட்ட அனுமதி அளித்தனர். தேர்தலையொட்டி கட்டப்படாமல் இருந்தது. நிழற்கூட கட்டுமான பணி நேற்று முன்தினம் காலை தொடங்கி நடந்து வந்தது. அன்றிரவு மர்ம நபர்கள், புதிய நிழற்கூடம் கட்டட சுவற்றை இடித்து விட்டனர். இதையடுத்து இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வேப்பிலைப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை, 8:30 மணிக்கு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சரவணன், கடத்துார் பி.டி.ஓ.,மீனா, இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிழற்கூடம் கட்டடத்தை இடித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், 10:00 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால், ஒன்றரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு பஸ்
பயணிகள் அவதிப்பட்டனர்.