/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்
/
உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்
உள்ளாட்சி பதவிகளுக்கு அ.தி.மு.க.,வினர் வேட்பு மனு தாக்கல்
ADDED : செப் 26, 2011 11:45 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க.,வினர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சில பதவிகளுக்கு இன்று (செப்.,27) மற்றும் 29ம் தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.,வில் தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. மற்ற பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று பெரும்பாலான அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி போட்டியிடுகிறார். நேற்று அ.தி.மு.க., அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் அன்பழகன் ஆகியோருடன் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்பு வேட்பாளர் சுமதி கூறியதாவது: நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை உடனடியாக அகற்றி தூய்மையான நகராட்சியாக மாற்றப்படும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட தர்மபுரி நகராட்சி பஸ் ஸ்டாண்டை சீரமைத்து நவீனப்படுத்துதல், நகராட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதியுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டப்படும். ஆறு மாதத்துக்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு பழுதடைந்த சாலையை சீரமைப்புதுடன் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் குருநாதன், பாசறை செயலாளர் சங்கர், முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி, இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒச்சியம்மாள், பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ராஜா, பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கஸ்தூரி, அரூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காவேரி ஆகியோர் அ.தி.மு.க., சார்பில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் நேற்று அ.தி.மு.க.,வினர் பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததால், நேற்று நகராட்சி, பஞ்சாயத்து யூனியன் அலுவலங்களில் காலையில் இருந்து மதியம் 3 மணி வரையில் பரபரப்பாக இருந்தது. அ.தி.மு.க., சார்பில் வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாததால், கவுன்சிலர் பதவிக்கு சீட் கேட்டவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் தலைமøயில் நடந்தது. இதில், கட்சி தலைமையின் உத்தரவுப்படி வேட்பாளர்கள் தேர்வு நடந்ததாக தெரிகிறது. நேற்று மாலையில் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அ.தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.