ADDED : ஆக 17, 2012 02:56 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தினை
ஊக்கப்படுத்தும் விதமாக, நாட்டு கோழி பண்ணை அமைக்க, 25 சதவீதம் அரசு
மானியம் வழங்கப்படுகிறது.
கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு கோழிப்பண்ணை தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கோழி
வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்
நாட்டு கோழி பண்ணைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்களக்கு, தமிழக அரசு சார்பில்
கோழி கொட்டகைகள் அமைக்க ஏற்படும் செலவில், 25 சதவீதம் மானியம்
வழங்கப்படுகிறது. மீதி செலவு தொகையை வங்கிகள் மூலம் கடனாக பெற்று பயனாளிகள்
பண்ணைகள் அமைத்து கொள்ளலாம்.
நாட்டு கோழிகளை ஆண்டு முழுவதும் விவசாயிகள் வளர்க்க ஊக்கப்படுத்தும்
பொருட்டு, இரண்டாம் தொகுப்பு கோழி குஞ்சுகள் வாங்கும் செல்வில், அரசு 50
சதவீதம் மானியம், மூன்றாம் தொகுப்பு கோழி குஞ்சுகள் வாங்கும் செலவில், 30
சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 250 எண்ணிக்கை கொண்ட நாட்டு
கோழிப்பண்ணைகள் அமைக்கவும் மேற்படி மானியம் கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் விவசாயிகள், தனி நபர், தொழில் முனைவோர், சுய
உதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட தகுதியானவர்கள். கோழிப்பண்ணை
அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலே அல்லது குடும்ப உறுப்பினர் பெயரில்
இருத்தல் வேண்டும். கோழி பண்ணை விரிவாக்கம் செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகளும்
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலையின் கீழ் இயங்கும்
பயிற்சி மையங்களில், ஐந்து நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.
தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் அரசுடமை ஆக்கப்பட்ட வங்களில் இருந்து கடன்
வாங்குவதற்கான ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்று
விண்ணப்பங்களை அரூர் மற்றும் தர்மபுரி கால்நடை பராமரிப்பு துறை உதவி
இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து அனைத்து விவசாயிகளும் பயன் பெற்று
கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04342 - 234774 என்ற டெலிஃபோன் எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
