ADDED : மார் 18, 2024 03:12 AM
அரூர் பகுதி பக்தர்கள்
திருப்பதிக்கு நடைபயணம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வடுகப்பட்டி, மாவேரிப்பட்டி, துாரணம்பட்டி, கீழ்மொரப்பூர், தாமரைகோழியம்பட்டி, ஈச்சம்பாடி, கே.வேட்ரப்பட்டி, வெளாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று, திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், '70க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்கிறோம். வரும், 23ல், திருப்பதிக்கு சென்றடைந்து சுவாமியை தரிசிக்க உள்ளோம். கடந்த, 18 ஆண்டுகளாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறோம்' என்றனர்.
பெண், மாணவி மாயம்இண்டூர்: இண்டூர் அடுத்த, நாகர்கூடல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாது, 65; இவர் மனைவி ரஞ்சிதம், 53; இவர், கடந்த, 12 அன்று உடல்நிலை சரியில்லை என, வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து, அவரது கணவர் அளித்த புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* பாப்பாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின், 17 வயது மகள், பாப்பாரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்
தர்மபுரி-
தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து சென்றார். அப்போது, தர்மபுரி அடுத்த ராஜாபேட்டை வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 2 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. வாகன ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், வாகனத்தை கைப்பற்றி, தர்மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்து, உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க, அவர் புகார் அளித்தார்.
தனியார் ஊழியரின்மொபட் திருட்டு
அரூர்: அரூர் அடுத்த சோரியம்பட்டியை சேர்ந்தவர் அன்புரோஸ், 53; அரூரில் உள்ள தனியார் காஸ் கம்பெனியில் டெலிவரி மேனாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த, 12ல் இரவு, 7:30 மணிக்கு அரூர் குரங்குபள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன் நிறுத்தியிருந்த அவரது, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட் மாயமானது. புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாடியிலிருந்து விழுந்தகட்டட தொழிலாளி பலி
பாப்பிரெட்டிப்பட்டி-
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் மதிவாணன், 46, கட்டட தொழிலாளி. இவர், அதே கிராமத்தில் உள்ள துரை என்பவரின் வீட்டிற்கு கட்டட வேலைக்கு நேற்று முன்தினம் சென்றார். மாலை, 6:00 மணியளவில் மேல்மாடியில் பணியாற்றியபோது தவறி கீழே விழுந்தார். இதில் இடுப்பில் அடிபட்டதால், அவரை அங்கிருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு அரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு உயிரிழந்தார். மனைவி சாலா புகார் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

