ADDED : ஆக 06, 2011 02:30 AM
தர்மபுரி: தர்மபுரியில் கடந்த இரு நாட்களாக ஏமாற்றி வந்த மழை நேற்று மாலை திடீரென மழை பெய்ததால், ஆடிப்பட்ட விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி இந்தாண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாத நிலையில், ஆடிப்பட்ட சாகுபடிக்கு விவசாயிகள் நிலங்களை தயார் செய்து வைத்திருந்தனர். சில விவசாயிகள் ஆடி பெருக்குக்கு முன் விதைகள் விதைத்து மழைக்கு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், மழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. கடந்த இரு நாட்களாக இருண்ட வானிலை இருந்த போதும், மழையில்லை. நேற்று காலையில் இருந்து வழக்கத்துக்கு மாறாக வெயில் வாட்டியது. மாலை 4.30 மணிக்கு மேல் இருண்ட வானிலையுடன் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து 4.55 மணியில் இருந்து லேசான மழை பெய்ய துவங்கி தொடர்ந்து பரவலான மழை பெய்தது. மழையால் ஆடிப்பட்ட விதைப்பு செய்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். லேசாக பெய்த மழை என்றாலும், மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு பூமியில் ஈரம் இருக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரி நகரில் மழையால் கால்வாய்களில் தேங்கியிருந்த சாக்கடை கழிவு நீர் மழைநீருடன் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், முக்கிய சாலைகளில் சாக்கடை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி துர் நாற்றம் அடிக்க துவங்கியது.