/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாச்சாத்தி பாலியல் வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
/
வாச்சாத்தி பாலியல் வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
வாச்சாத்தி பாலியல் வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
வாச்சாத்தி பாலியல் வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
ADDED : செப் 30, 2011 12:34 AM
தர்மபுரி: நாட்டையே உலுக் கிய வாச்சாத்தி கற்பழிப்பு குற்றச்சாட்டு வழக்கில், தர்மபுரி அமர்வு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்ட, 215 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், 12 பேருக்கு, 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மற்றவர்களுக்கு, ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையும் தண்டணை விதித்து உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் உள்ள மக்கள், சந்தன கட்டைகள் பதுக்கி வைத்து, கடத்துவதாக வனத்துறைக்கு, 1992ம் ஆண்டு புகார் வந்தது. அதே ஆண்டு ஜூன் 20ம் தேதி, 155 வனத்துறையினர், 108 போலீஸார், ஆறு வருவாய் துறையினர் அடங்கிய கூட்டுப்படை அமைக்கப்பட்டு, வாச்சாத்தி கிராமத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 16 டன் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த, 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் மீது வழக்கு பதிவு செய்து, 133 பேரை கைது செய்தனர். சோதனை என்ற பெயரில், கூட்டு குழுவில் இடம்பெற்ற போலீஸார் மற்றும் வனத்துறையினர், மலைக்கிராம பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில், 18 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டு, 1995ம் ஆண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு கோவை மற்றும் கிருஷ்ணகிரி நீதிமன்றங்களில் நடந்தது. கடந்த 2008ம் ஆண்டு, தர்மபுரி அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம், இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று இவ்வழக்கில், தர்மபுரி அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, 269 பேரில், 54 பேர் இறந்து விட்டனர். மீதி, 215 பேர் நீதிபதி முன் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட, 215 பேருமே குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து, ஒவ்வொருவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தனித்தனியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பெரும்பாலானவர்கள் தாங்கள் சம்பவ இடத்துக்கு செல்லவில்லை என கூறினர். பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. இதில், இந்திய தண்டனை சட்ட பிரிவு 376ன் கீழ், 12 பேருக்கு, 10 ஆண்டுகளும், 3,000 ரூபாய் அபராதமும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதில், 10 ஆண்டுகள் தண்டனை மற்றும் 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர்கள்: அருணாசலம், ஆறுமுகம், ராஜகோபால், ராஜமாணிக்கம், கோவிந்தன், ரத்தினவேலு, வேடியப்பன், சிதம்பரம், பெருமாள், அழகிரி, காளியப்பன், ஜானகிராமன். ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர்கள்: பெரியநாயகம், பச்சியப்பன், பெருமாள், பழனி, மாதையன். மேற்கண்ட, 19 பேருமே வனத்துறையை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் தவிர, குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் மற்றும் குறைந்தபட்சம் ஓராண்டு வரையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பை முன்னிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாச்சாத்தி கிராம மக்கள், நீதிமன்றத்தில் குவிந்தனர். தண்டனை விவரத்தை கேள்விப்பட்ட அவர்கள், 'இந்த தண்டனை போதாது. குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை அளிக்கப்பட வேண்டும்' என, தெரிவித்தனர். ஐ.எஃப்.எஸ்., அதிகாரிகள் 3 பேருக்கு 3 ஆண்டு சிறை இவ்வழக்கில், ஐ.எஃப்.எஸ்., அதிகாரிகள் ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன், பாலாஜி, சிங்காரவேலு ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதில், சிங்காரவேலு இறந்து விட்டார். ஹரிகிருஷ்ணன், நாதன், பாலாஜி ஆகியோருக்கு எஸ்.சி., எஸ்.டி., பிரிவு சட்டப்படி மூன்றாண்டு தண்டனையும், 1,000 ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டது. 342வது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் முத்தையனுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 10 ஆண்டுகள் மற்றும் ஏழு ஆண்டு தண்டனை பெற்றவர்களை தவிர, 198 பேர் அபராத தொகையை கட்டிவிட்டு, மேல் முறையீடு செய்ய இருப்பதால், அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.