ADDED : ஜன 06, 2026 07:05 AM

அரூர்: அரையாண்டு விடுமுறை முடிந்து, நேற்று தொடக்கப் பள்ளிகள், திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க, ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, முப்பருவ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில், முதல் இரண்டு பருவங்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் பருவம் துவங்கி உள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
அரூர் கல்வி மாவட்டத்தில், 625 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டன. அரூர் ஒன்றியம் சி.கோபிநாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மொரப்பூர் ஒன்றியம் சாமண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினார். இதில் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
