/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் தொகுதியில் வி.சி., போட்டியிட வேண்டும் நிர்வாகிகள் பேச்சால் தி.மு.க., கூட்டணி கலக்கம்
/
அரூர் தொகுதியில் வி.சி., போட்டியிட வேண்டும் நிர்வாகிகள் பேச்சால் தி.மு.க., கூட்டணி கலக்கம்
அரூர் தொகுதியில் வி.சி., போட்டியிட வேண்டும் நிர்வாகிகள் பேச்சால் தி.மு.க., கூட்டணி கலக்கம்
அரூர் தொகுதியில் வி.சி., போட்டியிட வேண்டும் நிர்வாகிகள் பேச்சால் தி.மு.க., கூட்டணி கலக்கம்
ADDED : ஆக 12, 2025 05:07 AM
அரூர்: 'அரூர் தொகுதியில், வி.சி., போட்டியிட வேண்டும்' என, பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பேசியதால், தி.மு.க., கூட்டணி கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், அரூர் (தனி) தொகுதியில் வி.சி., போட்டியிட வேண்டும் என்ற முனைப்பில், அக்கட்சி நிர்வாகிகள் களமிறங்கி உள்ளனர். இதற்காக கடந்த, 9ல் அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., சார்பில், முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியான, தி.மு.க., சார்பில், அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.பி., மணி, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டனர். முன்னதாக, திருமாவளவன் மேடைக்கு வருவதற்கு முன்பு பேசிய, வி.சி., கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும், 'கடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் தி.மு.க.,வின் வெற்றிக்கு, அரூர் தொகுதியில், வி.சி., கட்சியால் கிடைத்த கூடுதல் ஓட்டுக்கள் தான் காரணம்.
மேலும், 2001, 2006, 2011 மற்றும் 2016 என, 4 சட்டசபை தேர்தல்களில், அரூர் தொகுதியில் போட்டியிட்டு, வி.சி., வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், வரும், 2026 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், அரூர் தொகுதியில், வி.சி., போட்டியிட வேண்டும். அரூரில் வி.சி., வெற்றி பெற்றால், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியமைக்கும்' என்றனர்.
வி.சி., நிர்வாகிகளின் பேச்சு குறித்து, அக்கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அரூர் தொகுதியில், வி.சி., கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வக்கீல் மணி, பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை விட, 21,300 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
தர்மபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில், தி.மு.க.,வை விட, பா.ம.க., கூடுதல் ஓட்டுக்கள் பெற்றது. ஆனால், அரூர் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் மணிக்கு, 85,850 ஓட்டுக்களும், பா.ம.க., வேட்பாளர் சவுமியாவிற்கு, 46,175 ஓட்டுக்களும் கிடைத்தன. அதன்படி கிடைத்த, 39,675 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான், மணி வெற்றி பெற்றார். இதற்கு, வி.சி., கட்சி முக்கிய காரணம். இந்த ஓட்டு வித்தியாசம் தான், தி.மு.க., வெற்றிக்கு காரணமென, அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க., - எம்.பி., மணி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர், பல மேடைகளில் கூறியுள்ளனர்.
எனவே, வரும், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், அரூர் தொகுதியில், வி.சி., போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான், முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தலைவர் திருமாவளவனிடம், தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., சார்பில், முதற்கட்டமாக, 27 லட்சம் ரூபாய் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கடந்த, 2021ல், தி.மு.க., கூட்டணியில், அரூரில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மா.கம்யூ., மீண்டும், அரூரில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. தி.மு.க.,வினரும், அரூரில் தங்கள் கட்சி போட்டியிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில், அரூர் தொகுதியில், வி.சி., போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி நிர்வாகிகளின் பேச்சு மற்றும் அவர்களின் செயல்பாடுகளால், தி.மு.க., மற்றும் மா.கம்யூ., கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.