/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலருக்கு 'டோஸ்'
/
பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலருக்கு 'டோஸ்'
பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலருக்கு 'டோஸ்'
பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலருக்கு 'டோஸ்'
ADDED : டிச 16, 2025 06:09 AM
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, தி.மு.க., தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, கவுன்சிலர்கள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம மனு மீது, நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலரை, மாவட்ட கலெக்டர் டோஸ் விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த, 2020ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 13 இடங்களில் தி.மு.க.,வும், வி.சி., மற்றும் காங்., தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த மாரி, பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல், தன் விருப்பம் போல் செயல்படுவதாக, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.இதையடுத்து, கடந்த நவ.,17ல், பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யகோரி, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி என, 10 கவுன்சிலர்கள் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டனர். அதை தொடர்ந்து, மாரியை, தலைவர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, 10 கவுன்சிலர்களும் கடந்த நவ., 24 அன்று மாவட்ட கலெக்டர் சதீஸை சந்தித்து, 'அபிடவிட்' அளித்தனர்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு கொடுத்து ஒரு மாதம் ஆகியும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நேற்று, 10 கவுன்சிலர்களும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில், 'நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தால், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், விடுமுறை எடுத்துவிட்டு சென்று விடுகிறார். உரிய பதில் அளிப்பதில்லை. இதனால், பேரூராட்சி நிர்வாகத்தில் எந்த பணிகளும் நடக்காமல் முடங்கியுள்ளது' என குற்றம்சாட்டினர்.
அதை தொடர்ந்து, பேரூராட்சி இளநிலை உதவியார் பழனியின் மொபைல் மூலம், செயல் அலுவலர் ரவிகுமாரை தொடர்பு கொண்ட, கலெக்டர் சதீஸ், மொபைலை ஸ்பீக்கரில் போட்டு, கூட்டரங்கின் ஓப்பன் மைக்கில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கேட்கும் படி பேசினார். 'கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, ஏன் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. கவுன்சிலர்கள் கேள்வி கேட்டால், விடுமுறையில் நீங்கள் சென்றுவிடுவதால் அங்கு பாதிப்படையும் பணிகளை யார் கவனிப்பது. பேரூராட்சியில் எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளாமல், நீங்கள் செயல் அலுவலராக இருப்பதால் மக்கள் என்ன பயனடைய முடியும். சட்டபூர்வமான நடவடிக்கையை கூட செய்யாமல் ஏன் மாத கணக்கில் மக்களை கலெக்டர் அலுவலகம் வரை அலைக்கழித்து வருகிறீர்கள்' என, கடுமையான வார்த்தைகளால் டோஸ் விட்டார். மேலும், நம்பிக்கையில்லாத தீர்மானம் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதனால் பேரூராட்சி உயர் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

