ADDED : செப் 09, 2026 05:59 AM
பாலக்கோடு:பாலக்கோடு
அருகே, சோமனஹள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, பஞ்.,
நிர்வாகம் டிராக்டர் மூலம், குடிநீர் வினியோகம் செய்யும் நிலை
ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம்
பி.கொல்லஹள்ளி பஞ்.,ல், பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை போக்க,
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும், உள்ளுர் நீர் ஆதாரங்களான, 36
ஆழ்துளை கிணறுகள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மாவட்டத்தில் நிலவும் கடுமையாக வறட்சியால்,
பி.கொல்லஹள்ளி பஞ்., சோமனஹள்ளி பகுதியில் பயன்பாட்டில் இருந்த, 4
ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால், அப்பகுதி
மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை தீர்க்க முடியாமல், பஞ்., நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.
மேலும், சோமனஹள்ளி புதிய ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு கடந்த, 4
தினங்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டதால், அப்பகுதி
மக்களுக்கு பஞ்., நிர்வாகம் நேற்று முதல், டிராக்டர் மூலம் குடிநீர்
வினியோகம் செய்து வருகிறது.
இது குறித்து, பஞ்., செயலர் குழந்தைசாமி கூறியதாவது:
பி.கொல்லஹள்ளி
பஞ்.,ல் பல ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் முழுவதுமாக சரிந்து
விட்டது. இதனால் ஒருசில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க, மாவட்ட
கலெக்டரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், புதிய
ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
