/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இதர கழிவு என்ற பெயரில் கரும்பு பிடித்தம் பல ஆயிரம் ரூபாய் இழப்பால் விவசாயிகள் கண்ணீர்
/
இதர கழிவு என்ற பெயரில் கரும்பு பிடித்தம் பல ஆயிரம் ரூபாய் இழப்பால் விவசாயிகள் கண்ணீர்
இதர கழிவு என்ற பெயரில் கரும்பு பிடித்தம் பல ஆயிரம் ரூபாய் இழப்பால் விவசாயிகள் கண்ணீர்
இதர கழிவு என்ற பெயரில் கரும்பு பிடித்தம் பல ஆயிரம் ரூபாய் இழப்பால் விவசாயிகள் கண்ணீர்
ADDED : மார் 14, 2024 01:37 AM
அரூர், அரவைக்கு அனுப்பப்படும் ஒரு லோடு கரும்பில், இதர கழிவு என்ற பெயரில், பல நுாறு கிலோ கரும்பு பிடித்தம் செய்யப்படுவதால், விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான கரும்பு அரவை, கடந்தாண்டு நவ., 18ல் துவங்கியது.
நடப்பு அரவைக்கு, 10,000 ஏக்கரில் பதிவு செய்த கரும்பு, 3.25 லட்சம் டன் அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டு கரும்பு வெட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில், அரவைக்கு அனுப்பப்படும் ஒரு லோடு கரும்பில், இதர கழிவு என்ற பெயரில், பல நுாறு கிலோ கரும்பு, பிடித்தம் செய்யப்படுவதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இது குறித்து, பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதாவது:
கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை துவங்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. வழக்கமாக அரவைக்கு அனுப்பப்படும் கரும்புக்கு, கட்டுக்கழிவு என்ற பெயரில் மட்டும் கரும்பு பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், நடப்பாண்டு, கட்டுக்கழிவு மட்டுமல்லாமல், இதர கழிவு என்ற பெயரில் ஒரு லோடுக்கு, பல நுாறு கிலோ கரும்பு பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆலையில் மட்டுமே, இதர கழிவு என்ற பெயரில், கரும்பு பிடித்தம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே, வேர்ப்புழு தாக்குதல் மற்றும் வறட்சியால், தோட்டத்தில் கரும்பு காய்ந்து வருகிறது. மேலும், உழவு செய்தல், கரும்பு நடவு, களை எடுத்தல், தோகை எடுதல் உள்ளிட்ட பராமரிப்பு செலவு மற்றும் வெட்டுக்கூலி, மாமூல், உரம், பூச்சிமருந்து ஆகியவற்றின் விலை, ஆண்டுதோறும் உயர்ந்து வருவதால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.
ஆலை நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான போக்கால், வரும் காலங்களில் விவசாயிகள் மாற்றுப்பயிருக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதர கழிவு பிடித்தத்தால், ஆலை நிர்வாகத்திற்கு பல லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அதை, விவசாயிகளுக்கு திரும்ப வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது குறித்து ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியாவிடம் கேட்டபோது, ''விவசாயிகள் சுத்தமான கரும்பை அனுப்புவதில்லை. இது குறித்து விவசாயிகளை அழைத்து கூறினோம். அதனடிப்படையில், 0.5 சதவீதம் பிடித்தம் செய்து வருகிறோம். விவசாய கூட்டம் என்றால் விவசாயிகள் வருவதில்லை. தனக்கு ஒரு விஷயம் வரும்போது தான், நாம் விவசாயி என, ஞாபகம் வருகிறது,'' என்றார்.

