/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வறட்சியால் கால்நடைகள் அடிமாடுகளாக விற்ற அவலம் புழுதியூர் மாட்டுச்சந்தையில் விவசாயிகள் சோகம்
/
வறட்சியால் கால்நடைகள் அடிமாடுகளாக விற்ற அவலம் புழுதியூர் மாட்டுச்சந்தையில் விவசாயிகள் சோகம்
வறட்சியால் கால்நடைகள் அடிமாடுகளாக விற்ற அவலம் புழுதியூர் மாட்டுச்சந்தையில் விவசாயிகள் சோகம்
வறட்சியால் கால்நடைகள் அடிமாடுகளாக விற்ற அவலம் புழுதியூர் மாட்டுச்சந்தையில் விவசாயிகள் சோகம்
ADDED : மே 02, 2024 07:43 AM
அரூர் : அரூர் அடுத்த புழுதியூரில் பிரபலமான மாட்டுச்சந்தை உள்ளது. புதன்கிழமையில், அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் மாட்டுச்சந்தை காலை, 10 மணி வரை நடக்கிறது.
உள்ளூர் மற்றும் சேலம், நாமக்கல், கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். இங்கு கன்றுக்குட்டிகள் முதல் நாட்டுமாடு, எருமைமாடு, கலப்பின மற்றும் ஜெர்சி மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதில், கிடா கன்றுகள், முதிர்ந்த மாடுகள், எருமை மாடுகள் ஆகியவற்றை சேலம், நாமக்கல் மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இவை அடிமாடாக இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக மாட்டுச் சந்தைக்கு, விவசாயிகள் யாரும் கறவை மாடுகளோ, விவசாய பணிக்கான காளை மாடுகளையோ வாங்க வருவதில்லை. அதே நேரம் வறட்சியால் மாடுகளை விற்பனை செய்ய விவசாயிகள் அதிகளவில் சந்தைக்கு வருகின்றனர்.
அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதால், ஏமாற்றமடைந்து, மாடுகளை கிடைத்த விலைக்கு அடிமாடாக விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த சந்தையில் மாடுகள் விற்பனைக்கு அதிகம் வந்திருந்தன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை அடிமாடாக விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
நேற்று நடந்த சந்தைக்கு, 400க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டன. வறட்சியால் மாடுகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் மற்றும் தீவன பற்றாக்குறையால் மாடுகளை வளர்ப்பதில் சிரமம் இருக்கிறது. மேலும், தீவனம் குறைவால் குறைவாகவே பால் கறக்கிறது. எனவே, வளர்த்த மாடுகளை விற்பனை செய்ய வந்தோம். ஆனாலும், நல்ல விலை கிடைக்கவில்லை. வறுமையால் பிள்ளைகள் போல் வளர்த்த மாடுகளையும், கன்றுகளையும் அடிமாட்டுக்கு விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்

