ADDED : ஜன 20, 2025 06:48 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, நாட்டுவெடி வெடித்ததில், வீட்டு மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பலியானார்.
தர்மபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் அபி, 28. இவர் மனைவி நாகவேணி, 25. இருவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்கின்றனர். இவர்களின் மகள் கவிநிலா, 6. பொங்கல் பண்டிகைக்கு, காரிமங்கலம் அடுத்த பெரியபுதுாரிலுள்ள தன் பாட்டி வள்ளி, 50 வீட்டிற்கு கவிநிலா சென்றார். நேற்று மதியம், 1:00 மணிக்கு பூமாண்டஹள்ளியிலுள்ள உறவினரான தருமன், 45, என்பவரின் வீட்டிற்கு, பாட்டி வள்ளியும், சிறுமி கவிநிலாவும் சென்றனர். அங்கு வீட்டின் மொட்டை மாடியில் கவிநிலா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நாட்டு வெடிகள் வெடித்ததில், துாக்கி வீசப்பட்ட கவிநிலா சம்பவ இடத்திலேயே பலியானார். இதில், மொட்டை மாடியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
காரிமங்கலம் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், தீபாவளிக்கு வாங்கிய பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளில் மீதமிருந்ததை வீட்டின் மொட்டை மாடியில் வைத்திருந்ததாகவும், அதன் அருகில் சிறுமி விளையாடிய போது வெடித்திருக்கலாம் என, வீட்டின் உரிமையாளர் தருமன் போலீசில் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டு வெடிகள் வெடித்த இடத்தில் பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.