/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆமேதனஹள்ளியில் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு
/
ஆமேதனஹள்ளியில் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு
ADDED : ஜன 05, 2025 01:27 AM
பாலக்கோடு,பாலக்கோடு அருகே, அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த ஆமேதனஹள்ளி கிராமத்தின் ஊர் மைய பகுதியில், 4 ஏக்கர், 60 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் ஆமேதனஹள்ளி, பெலமாரனஹள்ளி, செம்மனஹள்ளி, நல்லுார், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில், இங்குள்ள செல்லியம்மன், சாக்கியம்மன் கோவில் திருவிழாக்களுக்கு கூடுவது வழக்கம். மேலும், இந்த இடத்தை தை பொங்கல் திருவிழா எருதாட்டம், மண்டு திருவிழா மற்றும் பொதுநிகழ்ச்சி நடத்தவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சில ஆண்டுகளாக தனிநபர்கள் சிலர் அப்பகுதியில் கொட்டகைகள் அமைத்து, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வந்தனர். இதனால், திருவிழா மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி மனு அளித்திருந்தனர். இந்நிலையில், கலெக்டர் சாந்தி உத்தரவின்படி, நேற்று பாலக்கோடு தாசில்தார் ரஜினி தலைமையில் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். டி.எஸ்.பி.,
மனோகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுப்ரமணி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.