/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் சுதந்திர தினவிழா
/
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் சுதந்திர தினவிழா
ADDED : ஆக 16, 2025 01:41 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 79வது சுதந்திர தினவிழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சதீஷ், தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக, மூவர்ண பலுான்களை வானில் பறக்கவிட்டார். அதை தொடர்ந்து, போலீசார், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும், மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, பல்வேறு துறைகளை சேர்ந்த, 100 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார். தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில், பா.ம.க.,- எம்.எல்.ஏ.,க்கள் ஜிகே.மணி, வெங்கடேஷ்வரன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், கோவிந்தசாமி, ஐ.ஜி., செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா, நகராட்சி சேர்மன் லட்சுமி, ஆர்.டி.ஓ., காயத்ரி உடபட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
*ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், 79வது சுதந்திர தினவிழாவையொட்டி, சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த, 2 பேரின் குடும்பங்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் விபத்து நிவாரண தொகையை வழங்கினார். ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சத்யா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
*தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பேதாதம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 79வது சுதந்திர தினவிழா கொண்டாப்பட்டது. இதையொட்டி பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. அதில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி வழங்கினார்.
*கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நேற்று நடந்தது. விழாவில் கலெக்டர் தினேஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காவல் துறை, ஊர்காவல் படை, நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.