தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த நடைபயணம்

கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த நடைபயணம்

கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த நடைபயணம்


ADDED : பிப் 24, 2026 10:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க, மொரப்பூரில் இருந்து விவசாயிகள் நடைபயணமாக சென்றனர்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மொத்தம், 17.35 அடி உயர தடுப்பணையின் மூலம், 6,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மழைக்காலங்களில் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று திட்டம் வாயிலாக, மொரப்பூர், நவலை, கம்பைநல்லுார், செங்குட்டை, சின்னாகவுண்டம்பட்டி, கடத்துார், சிந்தல்பாடியிலுள்ள, 66 ஏரிகளை நிரப்ப, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.

இதையேற்று கடந்த, 2019 ஜூலையில், இது குறித்து ஆய்வு செய்ய, 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஒதுக்கியது. ஆய்வு நடத்தி அரசிடம் திட்ட வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த, 2020 பட்ஜெட்டில், 410 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2021ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.ராட்சத குழாய்கள் அமைத்து, பம்ப்பிங் மூலம், ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவதன் மூலம், 56 பஞ்.,களில் உள்ள, 8,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னையும் தீரும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.ஸ்டாலின், உதயநிதி வாக்குறுதிகடந்த, 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும் கடந்த, 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஒடசல்பட்டியில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதியும், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், கிடப்பிலுள்ள இத்திட்டத்தால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வறட்சியால் பாதிப்பு

நடப்பாண்டு, அரூர், மொரப்பூர் சுற்றுவட்டாரத்தில் போதியளவு பருவமழை பெய்யவில்லை. இதனால், கோடை துவங்கும் முன் வறட்சியால் விவசாயம் பாதித்து, குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், மொரப்பூர் மற்றும் கடத்துாரில் வறண்டு கிடக்கும், 66 ஏரிகளை நிரப்பி இருக்கலாம்.

விவசாயிகள் நடைபயணம்இதனிடையே, கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்றும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி, மொரப்பூரில் இருந்து, 28 கி.மீ., துாரத்திற்கு, தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க, மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கத்தினர், 50க்கும் மேற்பட்டோர் நேற்று நடைபயணம் மேற்கொண்டனர். மொரப்பூர் - கல்லாவி பிரிவு சாலையில் துவங்கிய நடைபயணத்திற்கு, மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கத்தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார்.

இதில், கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு சென்ற விவசாயிகள், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ்யிடம் கோரிக்கை மனு அளித்தனர். நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்து, பீணியாறு விவசாயிகள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us