ADDED : செப் 22, 2024 05:31 AM
மொரப்பூர்: மொரப்பூர் கோணான் ஏரியில், குப்பை கொட்டுவதை தடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில், கோணான் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்புவதன் மூலம், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. ஏரிக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து வாய்க்கால்கள் முறையாக துார்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. மேலும், சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், அருகிலுள்ள விவசாய கிணறுகள் வறண்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மொரப்பூர் பஞ்.,ல், தினமும், சேகரிக்கப்படும் குப்பை மற்றும் இறைச்சி கடைகளிலிருந்து கொண்டு வரப்படும் கோழிக் கழிவுகள், ஏரியில் கொட்டப்படுவதால், மலை போல் குவிந்துள்ளன. விவசாயிகளின் நலன் கருதி, ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், ஏரியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி துார்வார, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
ஆய்வில் 50 கிலோ இறைச்சி பறிமுதல்
அரூர்: அரூரில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்பு குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில், பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம், பாட்சாபேட்டை, 4 ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட இடங்களில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இறைச்சி கடைகளில் ஆடு, கோழி மற்றும் மாட்டு இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், விற்பனையாகாத பழைய இறைச்சிகளும் விற்கப்படுகிறது. சாலையோர கடைகள், ஓட்டல்கள், துரித உணவு கடைகளில் உடலுக்கு கெடுதல் விளைவிக்க கூடிய கலர்பொடிகள் அதிகளவில் சேர்க்கப்பட்டு, பழைய எண்ணெயில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. எனவே, அரூர் பகுதியில் உள்ள கடைகளில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த செய்தி, காலைக்கதிர் நாளிதழில் கடந்த, 7ல் வெளியானது. இந்நிலையில், நேற்று அரூரில், அரூர் நியமன அலுவலர் கந்தசாமி தலைமையிலான, உணவு பாதுகாப்பு குழுவினர் மளிகை, ஓட்டல், பேக்கரி, பல்பொருள் அங்காடி மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம், 27 கடைகளில் ஆய்வு செய்ததில், 12 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், 50 கிலோ இறைச்சி மற்றும், 10 கிலோ தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.