ADDED : மார் 11, 2024 07:02 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான சிவ்ராஜ்சிங் சவுகான் பேசுகையில், ''இந்தியா சிறந்த நாடாக விளங்க வேண்டும் என்றால், தொழில் துறையின் பங்களிப்பு முக்கியம். தொழில்துறையின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி, முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள், பல மதத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டி இந்தியா போல் உள்ளது,'' என்றார்.கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறு, மற்றும் குறுந்தொழிலதிபர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
