பார்த்தீனியம் செடியை உரமாக்குவது எப்படி? வேளாண் அதிகாரி விளக்கம்
பார்த்தீனியம் செடியை உரமாக்குவது எப்படி? வேளாண் அதிகாரி விளக்கம்
ADDED : ஜூன் 23, 2015 01:42 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால், அந்த செடிகளை எப்படி உரமாக மாற்றுவது என்பது பற்றி, வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், நெல், கரும்பு, தக்காளி, மஞ்சள், மரவள்ளி கிழங்கு, பருத்தி மற்றும் கேழ்வரகு, சாலை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், காய்கறிகள் மற்றும் மலர் வகைகளும் குறிப்பிட்டு அளவு, சாகுபடி நடக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் பருவமழை பெய்யாதது மற்றும் விளை பொருள்களுக்கு உரிய விலை இல்லாதது, தொழிலாளர் பற்றக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், கடந்த, சில ஆண்டுகளாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், விவசாய நிலங்களில், பார்த்தீனியம் செடி வேகமாக பரவி வருகிறது. இதனால், விவசாய சாகுபடி குறைந்து வருவதுடன், கால்நடைகளும், விவசாயிகளும், பாதிக்கப்பட்டு வரும் அவல நிலை உள்ளது. இந்த செடிகளை அழிக்க, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
உழவியல் முறைப்படி, இளம் பார்த்தீனியம் செடிகளை, கையால் வேரோடு பறித்து, எரித்து விடலாம். பார்த்தீனியம் செடிகளை பூப்பதற்கு முன், மக்கவைப்பத்தின் மூலம், விதைகளின் முளைப்பு திறனை அழிக்கலாம். இந்த முறையில், பார்த்தீனியம் செடிகளை கத்தி மூலமாக, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, தரையில், 10 செ.மீ., உயரத்துக்கு அடுக்க வேண்டும்.
அதன் மேல், டிரைக்கொடெர்மா விரிடி, பூஞ்சான காரணியை பரப்பி அதன் மேல் அரை சதம் யூரியா கரைசலை தெளிக்க வேண்டும். இவ்வாறு, ஒரு மீட்டர் உயரத்துக்கு அடுக்கி, மண்ணை கொண்டு பூசி மூடவேண்டும். இரு வாரங்களுக்கு பின், ஒரு முறை நன்றாக கிளறி விடவேண்டும். இதன் மூலம், 40 நாட்களில், இது, சத்துமிக்க உரமாகி விடுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மக்கிய உரத்தை, எல்லா பயிர்களுக்கும் இடலாம். இந்த முறையில் பார்த்தீனியம் கட்டப்படுத்தவதோடு, அவற்றை உரமாக மாற்றுவதன் மூலம் இரட்டிப்பு பயன் அடையமுடியும்.
மேலும், பயிரிடப்படாத இடங்களாக விவசாய நிலங்களில், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 200 கிராம் வீதம் சமையல் உப்பை நன்கு கரைத்து, அத்துடன், இரண்டு மில்லி லிட்டர், ஒட்டு திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு, எட்டு கிராம் சோடியம் உப்பை நன்கு கரைத்து அத்துடன், இரண்டு மில்லி லிட்டர், ஒட்டு திரவம் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். முளைத்த பின், களைக்கொல்லியான மெட்ரிபூஜின், மூன்று கிராமை, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிரில்லாத நிலையில் தெளிக்க வேண்டும்.
மேலும், விளை நிலங்களில் பயிருக்கு தகுந்தவாறு, ரசாயன களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும், பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
