/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மஞ்சளில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு
/
மஞ்சளில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு
மஞ்சளில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு
மஞ்சளில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு
ADDED : டிச 13, 2024 01:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 13---
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், மஞ்சள் பயிரில் நோய் தாக்குதலால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலையில், பயிரை காப்பாற்ற அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் கடந்தாண்டில், மஞ்சள் ஒரு குவிண்டால், 1,800 ரூபாய் வரை விலை போனது. இதனால் விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டினர்.
கடந்த சில நாட்களுக்கு முன், பெஞ்சல் புயலால் பெய்த மழையில், இப்பகுதியில் சாகுபடி செய்த மஞ்சள் பயிரில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இலைகருகல், இலைப்புள்ளி மற்றும் கிழங்கு அழுகல் நோய் காணப்படுகிறது.
இலை நுனியில், முதலில் கரும்பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, நாளடைவில் அவை பெரிதாகி, இலை முழுவதும் காய்ந்து சருகாக மாறி விடுகிறது. கிழங்கு அழுகல் நோய் தாக்கிய மஞ்சள் பயிரில், இலை முழுவதும் மஞ்சள் நிறமாகி, தண்டு வரையில் பரவி, இளங்குருத்து பாதித்து, வேர் வளர்ச்சி குன்றி விடுகிறது. இதனால், மஞ்சள் கிழங்கு வளர்ச்சி பாதித்து, நீர்க்கசிவு தோன்றி அழுகி விடுகிறது.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், 2,000 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கனமழையால், மஞ்சள் பயிரில் இலை சுருட்டு, இலை புள்ளி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் பயிரில் கிழங்கு வரும் சமயத்தில், நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. பயிரை காப்பாற்ற, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், யாரும் வந்து பார்க்கவில்லை. நிவாரணம் தேவை எனில், எழுதிக் கொடுங்கள் என்கிறார்கள்.
ஆனால், பயிரை காப்பாற்ற என்ன செய்வது, என்ன மருந்து அடிப்பது என எந்த ஒரு தகவலையும் கூறுவதில்லை. மஞ்சள் சாகுபடி விவசாயிகளிடம், அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், நேரடியாக கள ஆய்வு செய்து, நோய் தாக்குதலில் இருந்து மஞ்சள் பயிரை காப்பாற்ற, ஆலோசனை கூற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.