ADDED : ஆக 07, 2024 06:37 AM
தர்மபுரி: மருத்துவக் காப்பீடு திட்டத்திலுள்ள குளறுபடிகளை களையக்கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
இணைச் செயலாளர் கோபால், பொருளாளர் கேசவன், துணைத்தலைவர் கார்த்திகேயன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மருத்துவ காப்பீடு திட்டத்திலுள்ள குறைபாடுகளை களைந்து, காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவசர சிகிச்சை பெறும் ஓய்வூதியர்களின் மருத்துவ செலவு தொகையை உடனடியாக, வழங்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் காலவரையறையை நீக்க வேண்டும். ஓய்வூதியர்கள் அனுப்பும் மனுக்களின் நிலையை அறிந்து கொள்ள, டிராக்கிங் சிஸ்டம் என்ற வெப்சைட்டை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், ஓய்வூதியர்களின் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாத, மருத்துவமனைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஓய்வூதியர்களின் காப்பீடு திட்டத்திற்கென, தனி வார்டுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.