அடிப்படை வசதிக்கு ஏங்கும் மக்கள் அரசு ஆவணங்களை ஒப்படைக்க முடிவு
அடிப்படை வசதிக்கு ஏங்கும் மக்கள் அரசு ஆவணங்களை ஒப்படைக்க முடிவு
ADDED : ஜூன் 17, 2026 04:36 AM

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி
மாவட்டம், பொம்மிடி அடுத்த வே.முத்தம்பட்டி ஊராட்சியில்
கிட்டம்பட்டி தண்டா, நாகலம்மன் கோம்பை, சிக்கம்பட்டி, மங்கலம்
கொட்டாய் உள்ளிட்ட, 9 கிராமங்கள் உள்ளன. இதில், 7,000க்கும் மேற்பட்ட
மக்கள் வசிக்கின்றனர்.
கிட்டம்பட்டி தண்டா பகுதியில் மட்டும்,
500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் வத்தல்மலை
அடிவாரத்தில் குடியிருந்து வருகின்றனர். முத்தம்பட்டி
கிராமத்திலிருந்து, 3 கி.மீ., துாரத்தில் இக்கிராமம்
அமைந்துள்ளது. கிராமத்திற்கு குடிநீர், சாலை வசதி இல்லை என கிராம
மக்கள் கூறினர்.
மேலும் அவர்கள் கூறியதாவது:
நாடு சுதந்திரம்
அடைந்தது முதல், இதுவரை கிராம மக்களுக்கு குடிநீர், சாலை வசதி இல்லை.
கரடு முரடான மண் சாலையை பயன்படுத்தி வருகிறோம்.. அத்தியாவசிய
தேவைக்காக தர்மபுரி, தொப்பூர், பொம்மிடி சென்று வருகிறோம். அவ்வாறு
செல்ல வேண்டுமென்றால், 3 கி.மீ., நடந்து முத்தம்பட்டியில் பஸ்சில்
செல்ல வேண்டும். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ மாணவியர், கூலி வேலைக்கு
செல்லும் தொழிலாளர்கள், தினமும் கரடு முரடான சாலையில் நடந்து வந்து பஸ்
ஏற வேண்டும். மழை காலத்தில் சேறும் சகதியுமான சாலையில் செல்லும் அவல
நிலை உள்ளது. சாலை வசதி இல்லாததால் , பஸ் வசதியும் இல்லை. கிராமத்தில்
கர்ப்பிணிகள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் அவசர கால
மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை. 108 ஆம்புலன்ஸ் கூட
கிராமத்திற்கு இதுவரை வந்ததில்லை.
இனியும் கிராமத்திற்கு சாலை
வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தாவிட்டால், வரும் உள்ளாட்சி தேர்தலை
புறக்கணிப்போம். அரசால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை,
ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட
கலெக்டரிடம் ஒப்படைப்போம்.இவ்வாறு கூறினர்.
