/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாரச்சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோர்
/
வாரச்சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோர்
ADDED : ஜன 13, 2024 04:06 AM
கம்பைநல்லுார்: கம்பைநல்லுாரில் நேற்று நடந்த வாரச்சந்தையில், பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.
தமிழகத்தில், வரும், 15ல், தைப்பொங்கலும், 16ல், மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கம்பைநல்லுாரில், நேற்று நடந்த வாரச்சந்தையில், பொங்கல் வைக்க தேவையான மண்பானைகள், மாடுகளுக்கு கட்டப்படும் பல்வேறு வகையான கயிறுகள், பல நிறங்களில் கோலமாவு மற்றும் கலர்ப்பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை விவசாயிகளும், பொதுமக்களும் அதிகளவில் வாங்கிச் சென்றனர். மாட்டுப் பொங்கலன்று, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் மணி கட்டி, மாலை அணிவித்து, அலங்காரம் செய்து, பொங்கல் படையலிட்டு மாடுகளுக்கு வழங்குவர். அப்போது கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறுகளை புதியதாக கட்டுவர். இதற்காக சந்தையில், மாடுகளுக்கு கட்டப்படும் மணிகள், கழுத்து கயிறு, கொம்பு கயிறு, சங்கு கயிறு, உள்ளிட்ட பல வகையான கயிறுகள் தரத்துக்கு ஏற்ப, குறைந்தபட்சம், 15 முதல், அதிகபட்சம், 650 ரூபாய் வரை, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மண்பானைகள் அதன் அளவை பொருத்து, 120 முதல், 350 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தைக்கு வழக்கத்தை விட, அதிகளவில் மக்கள் வந்ததால், விற்பனை ஜோராக நடந்தது.