/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மயானத்துக்கு பாதை வேண்டி பிணத்தை வைத்து மறியல்
/
மயானத்துக்கு பாதை வேண்டி பிணத்தை வைத்து மறியல்
ADDED : அக் 04, 2025 01:29 AM
பஞ்சப்பள்ளி, பஞ்சப்பள்ளி அருகே, மயானத்துக்கு பாதை வேண்டி சாலையில் பிணத்தை வைத்து, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த கும்மனுார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்தால், ஊருக்கு வெளியே உள்ள புறம்போக்கு நிலத்தில், காலம் காலமாக அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மயானத்துக்கு செல்லும் பாதையை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கிராமமக்கள் பாலக்கோடு தாசில்தார், பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில், பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் இறந்த வள்ளி, 50, என்பவரின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பிணத்தை கும்மனுார் சாலையில் வைத்து நேற்று காலை 6:00 முதல் 11:00 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு டி.எஸ்.பி.,மனோகரன்., பஞ்சப்பள்ளி போலீசார், பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.