ADDED : அக் 16, 2026 03:20 AM
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதே அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஈமச்சடங்கு உதவித்தொகை, வேளாண் கருவிகள், பயிர் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த, 196 பயனாளிகளுக்கு, 61.53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில், தர்மபுரி ஆர்.டி.ஓ., ஜெய்சங்கர், வேளாண் இணை இயக்குனர் பழனிசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன், பென்னாகரம் தாசில்தார் ஆறுமுகம் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாதேஅள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளியில் கழிவறை, மின்சாரம், குடிநீர், உணவின் தரம் குறித்து கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
