/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது
/
ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மே 08, 2024 05:03 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே சிறுகலுாரில் கடந்த ஏப்., 25 அன்று தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் சம்மந்தமாக, ரோந்து சென்றனர். அப்போது, மஹிந்திரா பிக்கப் வாகனத்தில் மூட்டைகளை ஏற்றிய இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், மேல்குள்ளம்பட்டி கோவிந்தசாமி, 46; கூரம்பட்டி முருகன், 39; என்பதும், வாகனத்தில் தலா, 50 கிலோ எடைகொண்ட, 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசியை ஏற்றியது தெரிந்தது. ரேஷன் அரிசியை தர்மபுரி அடுத்த, நல்லாம்பட்டியில் உள்ள நவீன அரிசி ஆலை உரிமையாளர் வடிவேல் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக, எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அரிசி ஆலை உரிமையாளர் வடிவேல் மற்றும் கோவிந்தசாமி, முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சங்கீதா, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்திக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதையேற்று, கோவிந்தசாமி மற்றும் வடிவேல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

