பூட்டியே கிடக்கும் மரகத பூஞ்சோலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
பூட்டியே கிடக்கும் மரகத பூஞ்சோலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
UPDATED : அக் 19, 2026 02:58 AM
ADDED : அக் 19, 2026 01:59 AM

.பாப்பிரெட்டிப்பட்டி: தமிழகத்தில், மத்திய அரசின் நிதி உதவியுடன் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மஞ்சவாடி ஊராட்சியிலுள்ள கோம்பூர் பகுதியில் சேலம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் மரகத பூஞ்சோலை கடந்த, 2024, ஆக., 14ல் திறக்கக்பட்டது. இதில், நிழல் தரக்கூடிய மரங்கள், நட்சத்திர ராசி மரங்கள், பழ வகை மரங்கள், உள்ளிட்டவைகள் நடப்பட்டு உள்ளது.
குடிநீர் வசதி, நிழற்கூடம், சிறுவர்கள் விளையாட்டு திடல் உட்பட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அதன்படி மக்கள் காலை முதல் மாலை வரை நடைபயிற்சி பெறவும், சிறுவர்கள் விளையாடவும் இந்த பூங்காக்களை பயன்படுத்த ஊராட்சி நிர்வாகத்திடம் வனத்துறை ஒப்படைத்து விட்டது. ஆனால் ஒப்படைத்து, 2 ஆண்டுக்கு மேலாகியும் இந்த மரகத பூங்கா பயன்பாடு இன்றி உள்ளது. எந்த நேரமும் பூங்கா பூட்டப்பட்டே உள்ளது. மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பயனற்று கிடக்கிறது. பெயரளவிற்கு மட்டுமே நடைபாதை உள்ளது. பூங்காவில் மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க அமைத்த குடில் பாழடைந்து வருகிறது. இது குறித்து அப் பகுதி மக்கள் கூறியதாவது:
வனத்துறையால் பெயரளவிற்கு கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. மத்திய அரசு மக்கள் பயன்பாட்டிற்கு கிராம பகுதிகளில் அமைக்க நிதி ஒதுக்கியது. ஆனால் கிராம பகுதியில் அமைக்காமல் கிராமத்திலிருந்து நெடுந்தொலைவுக்கு அப்பால் வனத்தையொட்டி அமைத்துள்ளனர். இதனால் மக்கள் சென்று வர முடிவதில்லை. இருந்த போதிலும் நெடுஞ்சாலை ஓரம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பயணிகள் ஓய்வெடுக்கவும், காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள பூங்கா சரியானதாக இருக்கும். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. எனவே, முறையாக பராமரித்து பூங்காவை மக்கள் பயன்படுத்த திறந்து விட, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
