/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பயிர் காப்பீட்டை எளிமைப்படுத்த கோரிக்கை
/
பயிர் காப்பீட்டை எளிமைப்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 01, 2025 01:41 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., கவிதா தலைமையில் நேற்று நடந்தது. இதில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் தங்கள் குறைகள் குறித்து எடுத்து கூறினர்.
இதில், பயிர்களுக்கான காப்பீடு திட்டம், தற்போது வரை விவசாயிகளுக்கு ஏற்றவாறு செயல்படுத்தவில்லை. பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை, விரிவான ஆய்வு மேற்கொண்டு, எளிமை படுத்தி மாற்றியமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில், வேர்ப்புழு தாக்குதலால், கரும்பு சாகுபடி பெருமளவில் பாதிப்படைந்து வருகிறது.
இதிலிருந்து பயிர்களை காக்க, நடவு பருவத்துக்கு முன், வேளாண் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் உரிய வழிமுறைகளை விவசாயிகளுக்கு தெரிவித்து, வேர்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒகேனக்கல் வழியாக பாய்ந்தோடும், காவிரி உபரிநீரை நீரேற்றம் செய்து, தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை, நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்ற, அரசுக்கு நிதி பற்றாக்குறை தான் சிக்கலாக இருந்தால், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செலவை விவசாயிகளே ஏற்க தயாராக உள்ளோம். நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை செங்கல் சூளைகளுக்கு வழங்குவதை தவிர்த்து, வேளாண் தேவைகளுக்கு மட்டும் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.
இது குறித்து, டி.ஆர்.ஓ., கவிதா பதிலளித்து பேசுகையில், ''விவசாயிகள் கூறிய கோரிக்கைகளில் ஒரு சில சாத்தியமுள்ளவை தான். எனவே, அவற்றை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுக்கப்படும். இதர கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து கொண்டு செல்லப்படும்'' என்றார்.
இதில், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை டி.ஆர்.ஓ., பிரியா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை டி.ஆர்.ஓ., ரவி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சரவணன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

