ADDED : நவ 13, 2026 05:09 AM
தர்மபுரி; தர்மபுரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், மவுனப்புரட்சி இயக்கம் நடந்தது. கிருஷ்ணகிரி கோட்ட தலைவர் திம்மராஜ், பாலக்கோடு கோட்டத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் குமரேசன் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் சிங்கராயன், கோட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மாநில செயலாளர் ரவி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் தெய்வானை, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் தங்கராஜ், ஆகியோர் பேசினர். இதில், மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெற்று, சாலை பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பாலக்கோடு ஆகிய கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் பணிபுரியும் சாலை பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் நிலை - 2 வழங்க வேண்டும் அலுவலக உதவியாளர், ஓட்டுனர், இரவு காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். காலியாக உள்ள, 10,000 பணியிடங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களை கொண்டு சாலை பணியாளர்களை நியமிக்க வேண்டும். உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி
நியமனம் வழங்க வேண்டும்,
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
