UPDATED : நவ 12, 2026 02:32 AM
ADDED : நவ 12, 2026 02:03 AM

பாலக்கோடு: பாலக்கோடு டவுன் பகுதி நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு டவுன் பகுதியில் மழை பெய்யும் சமயங்களில், மழைநீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கி நிற்கிறது. பாலக்கோடு - தர்மபுரி பிரதான நெடுஞ்சாலையிலுள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன், சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்படாததால் கழிவுநீருடன் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து, பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது, சாக்கடை கழிவுநீர் நெடுஞ்சாலையில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
எனவே, சாக்கடை கால்வாய் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
