/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொடர் மழை, பனிப்பொழிவால் எரியாத சோலார் விளக்குகள்
/
தொடர் மழை, பனிப்பொழிவால் எரியாத சோலார் விளக்குகள்
ADDED : டிச 29, 2024 12:52 AM
தர்மபுரி, டிச. 29-
தொப்பூர் கணவாய் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் விளக்குகள், தொடர் மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக எரியாததால், வனப்பகுதி தேசிய நெடுஞ்சாலை இருள் சூழ்ந்து காணப்பட்டது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கக்கூடிய மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக, என்.எச்., 44 தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக செல்கிறது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட, 3 மாவட்டத்தில், 86 கி.மீ., சாலையை, பாளையம் சுங்கசாவடி நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்நிலையில், தொப்பூர் வனப்பகுதியில் உள்ள, 8 கி.மீ., சாலை அதிக வளைவுகளுடன் அபாயகரமான சாலையாக உள்ளது. அடிக்கடி தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதால், அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதியில் விபத்து ஏற்படக்கூடிய பகுதியில் சாலையின் சென்டர் மீடியனில், கட்டமேடு முதல் தொப்பூர் கேண்டீன் வரை மூன்றரை கி.மீ.,க்கு, 120 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, 240 சோலார் விளக்குகள் பொருத்தபட்டிருந்தன. இந்நிலையில், டிச., மாத தொடக்கத்தில் இருந்து பெய்த கனமழை மற்றும் தொடர் பனிப்பொழிவு அதை தொடர்ந்து, பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், சோலார் பேட்டரிகள் சார்ஜ் ஆகவில்லை. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரியாததால், கட்டமேடு, ஆஞ்சநேயர் கோவில், இரட்டை பாலம் உள்ளிட்ட அபாயகரமான பகுதி சாலைகள் இருள் சூழ்ந்து காணப்பட்டன. இதில், விபத்து அபாயம் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். எனவே, சாலை பராமரிப்பு குழுவினர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதல்கட்டமாக, 120 சோலார் விளக்குகளை, மின் விளக்குகளாக மாற்றியுள்ளனர். மேலும், மீதமுள்ள விளக்குகளை மாற்றும் பணி நடந்து வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் அச்சப்பட தேவையில்லை என, சாலை பராமரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.